search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர்கள் உண்ணாவிரதம்"

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மத்திய சென்னை தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்றார்.

    அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பேசும்போது கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் பல கோடி ரூபாய் வரி வசூலித்து தரும் வணிகர்களை முழுமையாக புறக்கணித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

    சில்லறை வணிகத்தை கைப்பற்ற நினைக்கும் வால்மார்ட் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி கூறி உள்ளோம். ஆனால் மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள சட்ட விதிகளை எளிமைப்படுத்த சொன்னோம். அதையும் செய்யவில்லை. ஜி.எஸ்.டி. வரி சட்ட விதிகளை எளிமைப்படுத்தி 28 சதவீதம், 18 சதவீத வரி விதிப்புகளை முற்றிலும் திரும்ப பெற வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம்.

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பை பயன்படுத்தி அதிகாரிகளின் அத்துமீறல்களை அரசுக்கு எடுத்து கூறினோம். பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக்கோரி மனு கொடுத்தோம். இதே போல் எங்களது 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மத்திய- மாநில அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தோம். தமிழக முதல்-அமைச்சரையும் சந்தித்து பேசினோம்.

    ஆனால் இதுவரை மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வணிகர்களை புறக்கணித்து வருகிறது.

    இதனால் பேரமைப்பு சார்பில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதியன்று கறுப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதன் பிறகும் அரசு மவுனமாக இருப்பதால் இன்று மண்டல வாரியாக உண்ணாவிரதம் நடத்துகிறோம்.

    பேரமைப்பு நிர்வாகிகளை அழைத்து மத்திய- மாநில அரசுகள் பேசி தீர்வு காண வேண்டும்.இல்லையென்றால் காலவரையற்ற கடையடைப்பு, வரி வசூல் மறுப்பு, சட்டமன்ற முற்றுகை போராட்டம் என அறிவிப்புகள் வெளியிடும் கட்டாயம் ஏற்படும். எனவே அரசு உரிய தீர்வுகளை விரைந்து காண வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரதத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் கள் வி.பி.மணி, பேராசிரியர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர்கள் என்.டி.மோகன், ஜெயபால், ரவி, ஆதிகுருசாமி, நந்தன், கிருஷ்ணன், ராதா கிருஷ்ணஷா, பால்ஆசீர், இ.எம்.ஜெயக்குமார்.

    ஆவடி அய்யார் பவன் அய்யாத்துரை, ஆர்.கே.எம். துரைராஜன், வேலுசாமி, மனோகரன், அம்பத்தூர் ஹாஜி முகம்மது, தங்கதுரை, மீரான், தேசிகன், சின்னவன், ஆர்.எம். பழனி யப்பன், சுப்பிரமணியன், கந்தன்சாவடி தொழில் அதிபர் வில்சன், கர்ணன், செந்தில், கே.ஏ.மாரியப்பன், ஷேக் முகைதீன் உள்பட பல்வேறு வணிக சங்க தலைவர்கள் பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணா விரதத்தை இன்று மாலை புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் முடித்து வைக்கிறார்.

    கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரதத்தில் மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன் மற்றும் மண்டல மாவட்ட தலைவர்கள், நிர் வாகிகள் பங்கேற்றனர்.

    ×